Sunday, April 8, 2012

மெய்வழி பற்றிய கேள்விகள் (FAQ -1)

.
ஆதியே துணை


மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் அவர்களின் திவ்வியப் போற்றி மலர்கள் என்ற நூலில் காணப்பெறும் மெய்வழி குறித்த உரையாடல்கள்:

(மெய்வழி குறித்த சில உண்மைகளை அறிய இவ்வுரையாடல்கள் வழிவகை புரியும்)


முன்னுரை: மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் பூர்வாசிரமத்தில் அ.மு.சண்முகம் என்ற பெயரை உடையவர். சேலம் மாவட்டம் அரசம்பாளையம் என்னும் கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து வருபவர். ஞான குருபெருமானாகிய பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களால் ஆட்கொள்ளப்பெற்று அவர்களால் திருவாய் மலர்ந்து மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் என்ற தீட்சா நாமம் பெற்றவர்.தமிழில் முதுகலைப் பட்டம் (M.A., BEd) பெற்று நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1980-ஆம் ஆண்டு அரசாங்கத்தாரால் நல்லாசிரியர் விருது வழங்கப்பெற்றவர்.

இவர் தன்னுடைய தமிழ்ப் புலமை அனைத்தையும் தன்னை ஆண்டு கொண்டருளிய சற்குரு பெருமானின் திவ்வியத் திருப்பெரும் புகழைப் பாடுவதிலேயே ஈடுபட்டு, அன்னவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றிய இன்னிசை பனுவல்கள், தெய்வப் பிரபந்த மணிகள், திவ்வியப் போற்றி மலர்கள், திவ்வியப் பிரபந்தத் திரட்டு,தெய்வக் கீர்த்தனைகள் என்னும் பெயருடை நூல்களாகத் தொகுக்கப் பெற்று விளங்குகின்றன. அவற்றில் சில:

திருவருட்சாலை ஆற்றுப்படை, சாலை ஆண்டவர்கள் பிள்ளைத்தமிழ், சாலையூர்ப் பள்ளு, ஊரல்மலைக் குறமங்கை, விண்பாங்கரசர் தென்பாங்கு, தெய்வத் திருவருளெம்பாவை, அருள்மார்க்க அன்னை திரு இரட்டை மணிமாலை, பெம்மான் பெருந்துறையார் பொன்னரங்கையர் மும்மணிக்கோவை, வான்மதிமணி நான்மணி மாலை, எழிலணி முத்தர் நாடால், திரு அம்மானை, நல்லாண்டு, நெஞ்சறிவுறூஉ, எழில் மணிமுடி திருமலரடி வண்ணம், மாதவர் மெய்ப்பதி, பூவடிப்போற்றிகள், தாயும் மகளும், அடைக்கலம், ஆதி எனதம்மை, திருப்பொன்னூஞ்சல், எந்தை மெய்வழித் தெய்வம், அருள் நடைச் சேகரம், நன்னாள் நடைமுறைப் பாடல், அன்பு விடு தூது, ஆதி நாதர் மெய்ப்பெரும் திருவுலா, சாலைக் கலம்பகம் , தெய்வத் திருவருட் கோவை, ஆதிபராபரை அந்தாதி, யுக உதயப் பரணி, சாலைப் பெருவுந்தியார், பன்மணிமாலை, பொன்னரங்கர் பண்ணலங்காரம், திரு மகான்மியக் கீர்த்தனைகள், பொன்னடி பரவும் இன்னிசை அமுதம், ஆகியன.

(குறிப்பு: மெ.இ.க.கோ.அனந்தர் மெய்வழி ஆண்டவர்களால் ஆட்க்கொள்ளப் பெறுவதற்கு முன் இளமைக்காலத்தில் ஒரு நாத்திகராக இருந்து, நாத்திகத்தைக் குறித்து 1000 பாடல்களுக்கு மேல் இயற்றியவர்)

இத்தகைய மேதகு புலவரின் சிறப்பை அடியேன் சொல்லின் அஃது பொருந்தாதென்பதனால், அத் தகுதிகள் படைத்த – அன்னவர்களின் ஆருயிர் ஜீவப் பிறவியரான மற்றொரு புலவர், வித்துவான் மெய்வழி சோமசுந்தரம் செட்டியார்(M.A., B.Ed) அவர்கள் அளித்துள்ள அணிந்துரையின் ஒரு பகுதியைக் கொண்டே கொண்டே அதனைக் காண்போம்:

வெண்பாவிற்குப் புகழேந்தி
விருத்த மெனும் ஒண்பாவிற்குக் கம்பன்
கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்
பரணிக்குச் ஜெயங்கொண்டான்
சந்தப் பாடலுக்குப் படிக்காசுப் புலவர்
காவடிச் சிந்துக்கு அண்ணாமலை ரெட்டியார்
தமிழிசைப் பாடலுக்கு அருணாச்சலக் கவிராயர், கோபால கிருஷ்ண பாரதியார்

என்று பட்டியலிட்டுக் கூறுவது வழக்கம். தமிழ்ப் புலமை கெரண்ட எல்லோருமே கவிதை இயற்ற முடியாது. மிகச் சிலர்க்கு மட்டுமே கவிபாடும் ஆற்றல் வாய்க்கும். இல்வாய்ப்புக்குரியோர்களும் எல்லாவகைச் செய்யுட்களையும் பாடிவிட முடியாது என்பதைத்தான் மேற்குறித்த பட்டியல் காட்டுகிறது.

மேலும் அனைத்து வகைச் செய்யுட்களையும் ஒன்று விடாமல் ஒரே புலவர் பாடியதாகத் தமிழ் மொழி வரலாற்றில் இதுநாள்வரை எவரையும் கூறமுடியாது. பாடியதாக வரலாறும் இல்லை.


ஏனெனில் அனைத்து வகைப் பாவகைகளையும் ஒருவரே பாடுவதென்பது மிகமிகக் கடினமான அறிய பெரிய செயலாகும்.

உண்மையிலேயே தமிழ்ப் புலமையோடு மெய்யான தெய்வத்தின் திருவருளைப் பெற்றவர்கள் மட்டும் தான் அவ்வாறு பாடமுடியும்.

மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் அவர்கள் மேட்டிமை, பொறாமை, அகந்தை முதலியன இல்லாதவராயும், நேசம், மகிழ்ச்சி, பணிவு, அன்பு முதலிய நற்குணங்கள் மேவப் பெற்றவராயும் உள்ளமையால்தான் சாலை ஆண்டவர்களின் தயவினைப் பெற்றார். அத்தகைய நற்குண நற்செயல்கள் நிரம்பிய உள்ளந்தான் சமரச சுத்த சன்மார்க்கர் சாலை ஆண்டவர்கள் திருநடம்புரியும் இடமாகும். அத்தகு இடத்தில் இருந்து தான் அங்கு வாழ்சாலை தெய்வத்தைக் குறித்து, ஆசிரியர் அண்ணா அவர்கள் நினைந்தும் நெகிழ்ந்த்தும் அன்பால் நிறைந்தும் ஊர்றேழும் கண்ணீரால் மதிஎலாம் தித்திக்க மன்னியமெய் அறிவெல்லாம் தித்திக்க இத்தகு சமரச நவரச மெய்வழிவேத கவிதை வெள்ளத்தைப் பொழிய முடியும்! பொழிந்திருக்கிறார்கள்.

எழுத்தெண்ணிப்பாடும் பல கட்டளைக் கலித்துறைப் பாக்கள் நிரம்பிய செய்யுட்கலெல்லாம் கூடத் தங்கு தடை யின்றிக் கடல்மடை திறந்தார்போலவும் பள்ளத்துட் பாயும் வெள்ளம் போலவும், மாரியணப் பொழிந்து நிற்பதை இந்நூளினைப் படித்துப் பார்ப்பவர்கள் நன்கு உணரமுடியும். இது வெறும் புகழ்மொழி அன்று! இந்நூலில் உள்ளவற்றை உள்ளபடி உண்டபின் உரைக்கின்றேன் - (வித்துவான் மெய்வழி சோமசுந்தரம் செட்டியார்)



1.அனந்தரும் ஜோதிடரும்

மல்லசமுத்திரம் என்னும் ஊரில் உள்ள "ஸ்ரீ லட்சுமி ஜவுளி ஸ்டோரில்" ஒரு நாள் மாலை அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு ஒருவர் (ஜோதிடர் என்று பிறகு தெரிய வந்தது) வந்தார். தையற்காரரிடம் தனக்குத் தைத்த சட்டை சரியில்லை என்று விவகாரம் பேசிக் கொண்டிருந்தார். என்னைத் திரும்பிப் பார்த்தார். என்னை நோக்கி வந்தார். என்னிடம் உரையாடினார். எங்கள் உரையாடல் வருமாறு:

ஜோதிடர் : ஐயா நீங்கள் யார்?

அனந்தர் : நான் ஓர் ஆசிரியர் ஐயா.

ஜோதிடர் : இதென்ன தலையிலும் இடுப்பிலும் இப்படிக் கட்டியிருக்கிறீர்கள்?

அனந்தர் : ஐயா! நான் மெய்வழியைச் சேர்ந்தவன். எங்கள் ஆண்டவர்கள் உத்திரவுப்படி இப்படிக் கட்டியுள்ளேன்.

ஜோதிடர் : மெய்வழி என்றால் என்னங்க ஐயா?

அனந்தர் : ஐயா அதைக் கேட்கப் பொறுமை வேண்டும் நான் பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறேன் 'பஸ்' வந்தால் புறப்பட்டு விடுவேன்.

ஜோதிடர் : சுருக்கமாகச் சொல்லுங்களேன்.

அனந்நர்:
"எவ்வழிமெய்வழி என்ப வேதாகமம்
அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி"

என்று திட ஞானக் கொண்டலராம் அடலேறுஞான வடலூரின் மேவு வள்ளல் பிரானவர்கள் எங்கள் ஞான பரம்பரைப் பெரியப்பா கூறியிருக்கிறார்களே அது தான் இம்மெய்வழி. என்னை ஆண்டுகொண்ட பரந்தாமர் தாங்கள் இயற்றியருளிய "ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்" என்னும் அற்புதமுதற்பெருநூலில்
தன்தன் மதத்தில் தவறா திருத்திப்
பண்பு பிறங்கப் பலகலை ஒக்க
இன்புற ஈட்டும் இயல்மொழி அண்ணல்
தன்பெரு வெளியே சாலையென்றோதே

என்று அருள்பாலித்தவாறு அவரவர் மதத்தின் உன்னதத்தை மெய்யாக அறிந்து உணர்ந்து அதன் வழி நடந்து உய்வதற்குத் துணை தருவது இம்மெய்வழி ஒன்றே

"கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்"

என்று திருவள்ளுவப் பெருந்தகை வழங்கிய அறிவா காரப் பொற்பேழையாகிய திருக்குறளில் கூறியவாறு கற்றதன் பயனை அடையச் செய்யும் உன்னதச் செந்நெறி மெய்வழி.

"உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்
உடம்பினுள் உத்தமனைக் காண்"

என்று எனது மூத்த ஞான சகோதரி பைந்தமிழ் மூதாட்டி ஒளவைப் பிராட்டியார் அவர்கள் தங்கள் ஞானக்குறளில் கூறியுள்ளார்களே அவ்வாறு உடம்பினைப் பெற்ற பயன், பிறப்பினாற் பெற்ற பயன் ஆகியவற்றை நுகரச் செய்யும் உய்வழி இம் மெய்வழி

ஜோதிடர் : இது ஒரு தனி மதமா?

அனந்தர் : எல்லா மதங்களும் எங்களுக்குச் சம்மதமே. அவரவர் மதத்தின் உண்மையை உய்த்து உணரும்போது அனைத்தும் ஒன்று தான் என்பது தெளிவாகும்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்துய்மினே"

என்ற பெருஞாலம் போற்றும் திருமூலர் அவர்களின் பொன் வாக்காகிய திருமந்திரம் நிரூபணமானது எங்கள் மெய்வழிச் சபையில் மட்டுமே.

ஜோதிடர் : நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?

அனந்தர் : ஆம். கண்டிருக்கிறேன்.

ஜோதிடர் : கடவுளே இல்லை என்கிறேன் நான்.

அனந்தர் : கடம் + உள் கடவுள் கடமாகிய தேகத்தினுள்ளே நான் எனது என்று கூறிக்கொண்டு உங்கள் பெயருக்கு உரியதாக இருந்து ஒரு தலைமுறை காலம் உங்களைத் தூக்கிச் சுமந்து கொண்டு உங்களுக்குத் தொண்டு செய்யும் உயிரை உங்களுக்குள் இல்லையென்றால் நீங்கள் பிணமா?

ஜோதிடர் : இல்லாத தொன்றை இருப்பதாகவும் கண்டதாகவும் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அனந்நர்: இருக்கிறதொன்றை நான் நிதரிசனமாகக் கண்டதொன்றை நீங்கள் இல்லையென்று மறுத்தால் நானும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் கண்டு களி கூர்ந்நு அனுபவித்து அகம்பூரித்து அணுக் கணம் தோறும் இன்புற்று மகிழும் அகமிய காரண காரியத்தை சுயம் பிரகாச நித்தியானந்ந பிரம்ம சொரூபத்தை நீங்கள் காணாததற்கு நான் பொறுப்பல்ல. உங்கள் வீட்டில் இருக்கிற ஒரு மாணிக்கத்தை நவரத்தின கசிதத்தை நீங்கள் காணவில்லை. காண முயற்சிக்கவும் இல்லை. அத்துடன் அதை இல்லையென்றும் சாதிக்கிறீர்கள். அந்தச் சாதிப்பையும் அந்த உன்னதமான உயிர் மாணிக்கம் தந்த வலுவினாலேயே சாதிக்கிறீர்கள். ஆனால் உங்களை ஏற்றுக் கொள்ளும்படி நான் வற்புறுத்தவில்லை. எனக்கு முன் வந்த ஞானபரம்பரை வானவர்கள் தெய்வீகச் செம்மல்கள் யாவரும் கண்டுள்ளார்கள். நானும் அவர்கள் கண்டபடியே கண்டு அனுபவித்துள்ளேன்.

"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"

என்று வாழ்வாங்கு வாழ்ந்த தாழ்விலாச் செந்நெரி ஆழ்வார் அண்ணாரும்.

கேட்டாயோ தோழி கிறி செய்த வாறொருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டாதனவெல்லம் காட்டிச் சிவம் காட்டித் தாள்தாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடெய்த ஆள்தான் கொண்டாண்டவா பாடு துங்காண் அம்மானாய்"

என்று ஆணிப் பொன்னாட்டுக் காணிக்கைநீதி மானிக்கவாசக மதி மாமன்னா அவர்கள் அன்று அருளிய வாறும் கண்டுள்ளேன்.

ஜோதிடர் : மெய்வழியில் சேர்ந்தால்தான் கடவுளைக் காண முடியுமா?

அனந்தர் : மெய்வழி - மெய்யான வழி சத் - உண்மை மார்க்கம் வழி சன்மார்க்கம் என்பதும் அதுவே அனைத்தும் ஒன்றே எனவே மெய்வழியில் சாராமல் மெய்யைக் கடவுளைக் காண முடியாது. சைவம், வைண்வம், கிறித்துவம், இஸ்லாம், புத்தம் அனைத்தின் நோக்கம் பொருள் யாவும் ஒன்றே யாவும் மெய்வழியே.

ஜோதிடர் : 'மெய்" என்றால் உடம்பல்லவா?

அனந்தர் : நெய் வைத்திருக்கும் சட்டி நெய்ச் சட்டி மெய்யை இதற்குள் வைத்திருப்பதால் இது மெய் யென்னும் ஆகு பெயராயிற்று.

ஜோதிடர் : நான் எத்தனையோ நூல்களைக் கற்றுள்ளேன் கடவுளைக் காணவில்லையே?

அனந்தர் : நூல் பல ஓதினால் மட்டும் கடவுளைக் கண்டுவிட முடியாது.

கற்றதும் கேட்டதுந்தானே எதுக்காக
கடபட மென்றுருட்டுதற்கோ கல்லாலெம்மான்
குற்றமறக் கைக்காட்டும் கருத்தைக் கண்டு
குண்ங்குறியற்றின்பநிட்டைகூட வன்றோ?

என்று ஆய்மதிச் சிந்தையர் தாயுமானப் பெருந்தகை அருளியவாறு சற்குருபிரான் திருவருளால் மட்டுமே காண இயலும். திருமூலர் பெருந்தகை தங்கள் திருமந்திரத்தில் குறித்தவாறு

உருவின்றி யேனின்று உருவம் புணர்க்கும்
கரு வின்றி யேநின்று தான் கருவாகும்
மருவன்றி யேநிற்கு மாய்ப் பிரானைக்
குருவன்றி யார்க்கும் கூட வொண்ணாதே

என்றும், ஆதி மெய் உதய பூரண வேதாந்தத்தில்

"ஏட்டிலுள்ள பாஷை எல்லாம் கரைத்திடினும்
காட்டும் குருவின்றிக் காண முடியாத தண்ணே" என்றும்

"காட்டும் குருவின்றிக் காணாதுனதுடம்புள்
பூட்டுடைய மாட்டாதே போம்"


என்றும் குறிப்பிட்டவாறு சற்குருவின்றி ஏதும் செய்ய இயலாது.

ஜோதிடர் : சற்குரு என்றால் யார்?

அனந்தர் :
அன்பர் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடைக்கட்டி - உம்பர்
பதமென்னும் வாழ்விற்கு உண்மை நெறிகாட்டும்
அவரன்றோ ஆச்சார்யன் இருப்பு

அதாவது இந்த தேகாலயத்தில் இருக்கும் ஜீவாத்மாவைப் பரமாத்மாவுடன் தொடர்புறச் செய்து தெய்வீக வாழ்க்கை என்னும் பேரின்ப போகப் பெரு நெறியை வான்கொடையை வழங்கும் வள்ளலே சற்குரு.

உடம்பினை முனனம் இழுக்கென்றிறுந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேண்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென
உடம்பினை யானிருந் தோம்பு கின் றேனே

என்று குறிப்பிட்டவாறு உடம்பினுள் கோயில் கொண்ட உத்தமனைத் தரிசிக்க வைப்பவரே சற்குரு.

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புஷ்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
காட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்திலுள்ள
முட்டாத பூசையன்றோ என் குருநாதர் மொழிந்ததுவே

வேகாத கால் சாகாத்தலை போகாப் புனல் இவையனைத்தையும் ஓரிடத்தில் காட்ட வல்லவரே சற்குரு.

ஜோதிடர் : இப்படிஎத்தனையோ சாமியார்கள் உலகத்தை ஏய்கிறார்கள். அவர்களுள் நீங்களும் ஒரு கூட்டம்.

அனந்தர் : ஐயா! உம்மையும் உலகத்தையும் நாங்கள் ஏய்த்த தென்ன? 'சாமி' என்றால் சா-மி சாவை மீருபவர் என்று பொருள். சாவை மீறச்செய்து சாமியை யார் எனக் காட்ட வல்லவர் எவரோ அவரே சற்குரு.

காவி கட்டிக் கொண்டவனெல்லாம் சாமியாரல்ல. பெண் வேடம் போட்டுக் கொண்டதால் ஒருவன் பெண்ணாகி விடுவானா? இன்னொரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா?

"பரித் ராயணாய சாதூனாம் வினாசாயஸதுஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனர்த்தாய ஸம்பவாமி யுகே யுகே"

என்று பகவத் கீதையில் பகவான் சொன்னது போல் சாதுக்களை இரட்சிப்பதற்காகவும் தீயோர்களை சங்காரம் செய்வதற்க்காகவும். யுகம் யுகம் தோறும் வருவன் என்று அன்று சொன்ன திருவாக்கின்படியே இந்த அதர்மம் ஓங்கிநிற்கும் கலிக்க டையில் அந்த சர்வேஸ்வரரே திருவுருத் தாங்கிக் கல்கி' அவதார புருஷோத்தமராக மெய்வழிச் சாலையம்பதியில் மெய்வழிச் சாலை ஆண்டவர்களாக எழுந்தருளினார்கள்.

ஜோதிடர் : நான் திருச்சிக்காரன். திரிச்சுத்திரிச்சுத்தான் பேசுவேன். உங்கள் ஆண்டவர்களையும் தெரியும் . உங்கள் நூல்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும். நம்மகிட்டே உங்கள் பாட்சா பலிக்காது.

அனந்தர் : நீர் திரிச்சுப் பேசுவதால் திரிஞ்சு போகிறவர் இங்கு எவருமில்லை.எல்லாம் அறிந்தவருமில்லை - இங்கு ஏதுமறியாதவருமில்லை என்று அந்தத் திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய தாயுமானப் பிரபுதான் அருளிச் செய்துள்ளார்கள். எங்கள் குரு தேவ பிரான் அருளிச் செய்துள்ள நூல்களை முற்றும் கற்றவர்களும் எம்பெருமானுடைய தவோன்னதப் பெருநிலையை முழுதும் அறிந்தவர்களும் சர்வ புவனாதியங்களிலும் இல்லை. நீர் அறிந்ததாகவும் தெரிந்ததாகவும் கூருவது முழுப் பொய் . எங்கள் பாட்சா உங்களிடம் பலிக்காது என்றீர். எங்கள் பாட்சா எமனை ஜெயிக்கும் பாட்சா இவ்வுலகம் அனைத்தும் எமன் கை அடக்கம். அந்த எமன் எங்கள் பெருமான் கை அடக்கம். எமனை ஜெயிக்கும் பாட்சாவின் முன் எமன் கைப்பட்டுப் பிண நாற்றத் தீட்டுக்கு உரிய நரர் எம்மாத்திரம். எனவே வெற்று முரண்டாட்டப் பேச்சு வெண்டுவதில்லை.

ஜோதிடர் : என்னைப் படைத்தவன் இறைவன் என்றால் அந்த இறைவனைப் படைத்தது யார்?

அனந்தர் : முதலில் உங்களையே உங்களுக்குத் தெரியாது. நான் எனது என்னை என்று சொல்கிறீர்களே.'நான்' என்பது உம் கையா? காலா? தலையா? என் உடம்பு என்கிறீர்களே? என் பெயர் என்கிறீர்களே அந்தப் பெயர் எதற்குச் சூட்டப்பட்டது? ஒருவன் இறந்துவிட்டால் இன்னான் இறந்துவிட்டான், அவன் பிண்ம் கிடக்கிறது என்கிறார்களே. இறந்த ஆள் யார்?
உடம்பின் வேறான பொருள் என்று ஆகிறதல்லவா? எனவே 'தான்' என்கிற தன் நாமத்துக்குறிய பொருளாகிய ஜீவனை ஆத்மாவை அறிந்து தன்னை அறிந்தவனாகும் போதுதான் தன் தலைவராகிய இறைவனை அறிய முடியும். நீர் போட்டிருக்கின்ற சட்டையைத் தைத்தவர் ஒருவர். நெய்தவர் ஒருவர் தைத்த மெஷினைச் செய்தவர் ஒருவர். இப்படி ஒரு பொருள் உண்டு என்றால் அதைச் செய்தவர் ஒருவர் உண்டு என்று அனுமாமிக்க வேண்டாமா? முழுமுதலாகிய
அந்தப் பரம்பொருள் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி. பார்க்குமிடம் எங்குமொரு னீக்கமற நிறைந்துள்ள பரிபூர்ண ஆனந்தம். அதனைப் படைத்தவர் யாரெனக் கேட்பது அர்த்தமற்றதன்றோ?

"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் என தென்றவரைக் கூடத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!"

ஜோதிடர் : எதையும் கண்டபின் தான் ஏற்றுக்கொள்வேன். எனக்குக் கடவுளைக் காட்டுங்கள் பார்ப்போம்?

அனந்தர் : சர்க்கரையை உண்டால்தான் தித்துப்புத் தெரியும். தித்துப்புத் தெரியட்டும் பின்னால் சர்க்கரையைக்ச் சாப்பிடுகிறேன் என்றால் எப்படியய்யா முடியும்? கடவுளைக் காண என்ன முயற்சி செய்தீர். உண்ணல், உறங்கல், பெண்டிர், மயல் உழல்தல் என்னும் இச்சிற்றின்ப நுகர்ச்சிகட்குக் செய்யும் முயர்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு இதற்கு முயற்சி செய்ததுண்டா?

கடவுள் என்ன சட்டைப் பையில் வைத்திருக்கிற பொருளா? இதோ பார் என்று எடுத்துக் காட்டிவிட. இந்தப் பெயர்க் கல்விக்கே முதலில் எழுத்துக்களைப் படித்து. சொற்கள், வாக்கியங்கள், நூல்கள் எனக் கல்வி பெற வரன்முறை உண்டு. அதற்கும் ஆசிரியர் வேண்டும் என்றால் பேரின்பப் பெருநெரியாகிய மெய்க்கல்வி கற்றுப் பிறவிப்பயன் பெறுவதர்க்கு ஒரு சற்குருபிரானைச் சார்ந்திருந்து அவர்கள் கூறும் நெறியில் நடந்து அவர்கள் திருவருளால் பெறும் செயலை வெறும் வாதத்தால் பெற்றுவிட இயலாது என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஜோதிடர் : தலைப்பாகை கட்டத்தான் வேண்டுமா?

அனந்தர் : எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம் இடுப்புக்கும் மேனிக்கும் காலுக்கும் அணிகள் அணியும் நாம் பிதானமான சிரசுக்கு அணி புனையாவிடில் அறிவு மழுங்கும்.

ஜோதிடர் : இப்படிக் கட்டிக் கொன்டால்தான் கடவுளைக் காணமுடியுமா?

அனந்தர் : அணுவுக்கு அனுவாகவும் அண்ட பிரம்மாண்டமாகவும் விளங்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரைத் தனக்குள் தரிசித்தவர், அவர்கள் திவ்யத்திருவடிகளைத் தன் சிரத்தில் தரித்தவர்கள் என்பதற்கு அடையாளமாக அந்த சர்வேஸ்வரரே திருவுருவம் தாங்கி வந்து காட்சிகொடுத்து அருள்பாலித்தது. இச்சிரோ மகடு மென்னும் தலைப்பாகையாகியை இரட்சிப்புச் சீரா.

ஐயா ஒரு பாத்திருத்தில் நெய் வைத்திருந்தால். அதற்குத் துணையாய் வேடு கட்ட வேண்டும். வெறும் பாத்திரத்திற்கு வேடு கட்டுவார்களா? எங்கள் பெருமான் மெய்யை எங்களுக்குக் காட்டி எங்கள் தலையில் ஏற்றி, நாறி அழுகிப் போக இருந்த தலையை வைரத்தலையாக ஆக்கி ஜீவமாணிக்கத்தைப் பதிப்பித்து அதற்கு வேடு கட்டியுள்ளார்கள். நீங்கள் கட்டியாகவேண்டும் என்பதில்லை. இது எமனுக்கு 'டேஞ்சர்', அது மட்டும் அல்ல. உங்களைப் போன்றவர்கள் இது ஏன் என்று கேட்கட்டும் என்ற நோக்கமும் அதிலொன்று.

ஜோதிடர் : ஓ, இது விளம்பரமா?

அனந்தர் : ஆம் இது பரமாகிய இறைவனை விளம்புகிற செயலகையால் விளம்பு + பரம் விளம்பரம் என்றும் கூறலாம்.

ஜோதிடர் : நான் இதனை வேஷம் என்கிறேன்.

அனந்தர் : நீங்கள் ஏன் இப்படி வேட்டியும் சட்டையும் அணிந்திருக்கிறீர்கள்?

ஜோதிடர் : அது என் விருப்பம்.

அனந்தர் : நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்கிறேன் அதற்கென்ன சொல்கிறீர்கள்?

ஜோதிடர் : அது எப்படி வேஷமாகும்? இங்கே இருப்பவர்களைப் போலில்லாமல் தனித்து உங்கள் உடை மட்டும் வித்தியாசமாகத் தெரிகிறதே.

அனந்தர் : கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். தலைப்பாகை கட்டினால் 'வேஷக்காரன்' என்கிறீர்.

என் அப்பன் தலைக்கட்டு, பாட்டன் தலைக்கட்டு என்றெல்லாம் தலைமுறைகளைச் சொல்வது வழக்கம். இடுப்புக் கட்டு, கைக்கட்டு என்று சொல்வதில்லை தலையில் அன்று கட்டியதால் தான் தலைகட்டு என்று வந்தது.
சட்டை மாட்டும் இடத்திற்குக் கூட தலைப்பா மாட்டியில் சட்டை மாட்டியிருக்கிறேன். அதை எடுத்து வா என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
ஆல்யத்தில் பரிவட்டம் (என்று தலையில்) கட்டித்தான் சாமி தரிசனம் செய்விப்பது வழக்கம் என்பது உமக்குத் தெரியுமோ தெரியாதோ?
ஒரு குடும்பத்தில் ஒருவன் காலமாகி விட்டால் இறந்தவனுக்குச் சடங்கு செய்தவனை ஜாதியை விட்டுத் தள்ளிவைத்துப் பின்னர் சாஸ்திர சடங்கு சம்பிரதாயங்கள் செய்து தலைபாகை கட்டித்தான் மீண்டும் ஜாதியில் சேர்ப்பது வழக்கம்.
ஊரில் கேட்டுப் பாருங்கள்.
ஆங்கிலேயன் காலத்தில் கூட ஆசிரியர்களும் அரசு அதிகாரிகள் பணியாளர்கள் அனைவரு தலையணி அனிந்திருப்பது வழக்கமாக இருந்தது.
திருமண மணமகன் தலைப்பாகை கட்டிக் கொண்டுதான் மணவறையில் அமர்ந்து தாலி கட்டவேண்டும்.
பழைய பெரிய குடும்பங்களில் தல்லைப்பாத்தூக்கு என்று ஒன்று இருந்தது. இன்றும் இருக்கிறது. இப்போதுதான் கலிமுற்றி வெயிலில் காயவும் காற்றில் பறக்கவும் விரி தலையராக எல்லோரும் திரிகிறார்கள்.
நாங்கள் தலைகாத்த தம்பிரானை எம்பிரானைச் சந்தித்து சார்ந்து தலைபாகை கட்டியுள்ளோம். எனவே இது வேஷம் அல்ல என்பதை இப்போதாவது, தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் வேஷம், கீஷம் என்று இனியாவது அவதூறு செய்யாமல் இருங்கள். மற்றவர்களுக்கும் கட்டுவார்கள் கடைசியில் வாய்க்கட்டு கைக்கட்டு அப்போது கூட தலைப்பாகை
கட்டமாட்டார்கள்.

ஜோதிடர் : கடவுளுக்குப் பிடித்தது காவி நிறம் தானோ?

அனந்தர் : இந்த தேகம் தூலம். இதற்குள் சூக்குமம், காரணம், மகாகாரணம் என்று மேலும் மூன்று தேங்கள் உண்டு. அவற்றுள் செம்மையான காரண தேகத்தைக் கண்ட செந்நெறிச் சான்றோர்கள் என்று காட்டுவதற்காக இந்தக் காவி நிறம் எடுத்து வைக்கப்பட்டது.

ஜோதிடர் : கடவுளை இந்தக் காவித் தலைப்பாகைக்குள் அடக்கி விட முடியுமா?

அனந்தர் : கடத்தினுள் உள்ள கர்த்தரைக் கண்டதற்கு இது அடையாளம் என்றேன். நீர் அதற்குள் அடக்க முடியுமா இதற்குள் அடக்க முடியுமா என்று கேட்கிறீரே இது விதண்டாவாதமல்லவா?

ஜோதிடர் : பதினெண் சித்தர்கள் பலவகையாகக் கடவுளைப் பற்றிக் கூறியிருக்கிறார்களே!

அனந்தர் :
"பண்ணியிடும் பணிபலவே பொன்ஒன்றேயாம்
பாண்டத்தின் பேர்பலவே மண் ஒன்றே யாம்
நண்ணுமறு சமயங்கள் போர்வே றல்லால்
நாதன் ஒருவரே"

எனவே பெரியோர்கள் கடவுளைப் பற்றிக் கூறியது அனைத்தும் ஒன்றே. தண்ணீர், நீலு, வாட்டர், பானி, வெள்ளம், அனைத்தும் ஒரு பொருளைக் குறிக்கும் பன்மொழிச் சொற்களே. எனவே இறைவனின் நாமங்கள் பல. இறைவன் ஒருவரே!

"இருதயத்தில் ஈசன் இருப்பிடம்' என்பது சைவ மதமுடிபு.
"இருதய கமலவாசா' என்று ஸ்ரீமன்நாராயணா மூர்த்தியை விளிப்பது வைணவ மத முடிபு.
இருதயத்தைப் படம் போட்டுக் காட்டி அது பிரகாசமாக இருப்பதாகக் காட்டுவது கிறிஸ்துவர்கள் முடிபு.
கல்பு (இருதயம்) பிரகாசமாகாதவன் காபர் (பாவி) என்பது இசுலாமிய மத முடிபு.
"ஓம் மணி பத்மே ஹம்" இருதய தாமரை மலரின் கண் புத்தபகவான் எழுந்தருளியிருப்பதாகக் கூறுவது புத்த மத முடிபு எனவே மத வேற்றுமையில்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

ஜோதிடர் : சித்தர் கூறியவற்றைவிட உங்கள் குருநாதர் என்ன புதிதாகக் கூறி விட்டார்கள்.

அனந்தர் : சித்தர்கள் கூறியதனைத்தையும் முற்றும் கற்றுவிட்டதுன் போலும் மெய்வழி அண்டவர்களின் நூல்களைத் துருவித்துருவிப் பார்த்து அதில் அதற்குமேல் ஏதும் புதிதாகக் கூறப்படாமல் இருப்ப்பதைக் கண்டுபிடித்து விட்டது போலும் நீர் பேசுவது விந்தைதான்.சித்தர்களும்,முத்தர்களும், முனிவர்களும், தேவர்களும் எதிர்பார்த்தபடி எழுந்தருளிய தனித்தலைமைப் பெரும்பதியாகிய எம்பெருமான் கூறியுள்ள அளவு, இந்த உலகம் தோற்றிய நாள் தொட்டு இதுகாறும் எவரும் மெய்யைப் பற்றிக் கூறியதில்லை என்று குன்றேறி முழங்குவேன்.

ஒரே ஒரு பாடலுக்கு முழுவிளக்கம் கூற உலகவிற் பன்னராலும் முடியாது. கொஞ்சம் யோசித்துப் பேசுங்கள்.

ஜோதிடர் : ஆறு ஆதாரம் உங்களுக்குத் தெரியுமா? எல்லாம் மூலாதாரத்தில் தான் துவங்குகிறது. புருவ மையத்தில் காந்த சக்தியிருக்கிறது. அதனால்தான் எல்லோரும் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள்.

அனந்தர் : நண்பரே! கடவுள் இல்லை என்றீர்கள். பின் நீங்கள் ஆறு ஆதாரம், புருவ மையம் காந்த சக்தி என்றும் பேசுகிறீர்கள். சந்தனத்தில் ஒரு குத்து சாக்கடையில் ஒரு குத்து குத்தினால் சந்தனமும் கெட்டுவிடும் சாக்கடையும் மணக்காது. எனவே, ஒரே நிலையாகப் பேசுங்கள் கண்களை இறுக மூடிக்கொண்டு விண்ணில் கதிர்மதிகள் இல்லை என்று பேசுவதால் அவை இல்லாமற் போய்விடமாட்டா. பாடல்கள் பல பாடினாலும் மேடையேறி முழங்கினாலும் பயன் ஏதுமில்லை. உண்மையை உணர முயல வேண்டும். மனிதன் தன்னையும் தனக்கு ஆதாரமான தலைவனையும் அறிந்து கொள்ள வேண்டுவதே கடமை என்று எல்லா வேதங்களும் வலியுறுத்துலின்றன.

ஜோதிடர் : வேதங்கள் இதிகாசங்கள் என்பவை ஆரிய திராவிடப் போர் பற்றிக் கூறுவனவே யன்றி வேறல்ல.

அனந்தர் : ஐயா! வேதங்களை முற்றும் கற்றுவிட்டது போலும் அவற்றில் ஒன்றும் இல்லை சும்மா வெறும் ஆரிய திராவிடச் சண்டை விஷயம்தான் அதில் கூறிப்பட்டிருக்கிறது என்றும் கூறக்கூடிய அளவுக்கு உங்களை நீங்களே மேதையாகக் கருதிக் கொள்வது வியப்பாக உள்ளது. நீங்கள் நினைக்கிற அளவு எளியவை அல்ல வேத மாமறைகள். இதிகாசங்கள் மெய்மாதவ மகான்களால் தபோநிலையிலிருந்து அருளப் பெற்ற பொக்கிஷங்கள் அவை. ஏட்டுக் கல்வியினரின் உறைகல்லில் உறைத்து மச்சம் பார்க்கிற அளவு அவை சாதாரணமானவை அல்ல. நரியதன் வாலால் கடலாழம் பார்த்த கதையாகிவிடும்.

ஜோதிடர் : பகவத்கீதை என்று முன்பு சொன்னீர்களே. அது மகாபாரதத்தில் ஒரு பகுதிதானே. மகாபாரதம் என்பது ஒரு அபத்தக் களஞ்சியம்.

அனந்தர் : காலத்தால் அழியாது ஒரு மகா காவியத்தை நன்மை செய்வோர் நற்பலன் பெறுவர், தீமை செய்வோர் அருநரகடைவர் என்பதை விளக்குவதற்காக இயற்றப்பட்ட ஒரு பெருங்காவியத்தை அபத்தக் களஞ்சியம் என்று கூற உமக்கென்ன அருகதையிருக்கிறது. காலதேச வர்த்தமானங்கள் கூர்ந்து கவனித்துப் பேசவேண்டும்.

ஜோதிடர் : திருக்குறளில் கூட "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு". என்றிருக்கிறது. அது சரியில்லை "ஆதி பகலவன் முதற்றே உலகு" என்றுதான் இருக்க வேண்டும். ஏனென்றால் சூரியனிலிருந்துதான் எல்லாமே தோன்றின.

அனந்தர் : உலகப் பொது மறை என்று அனைத்துலக அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு மாபெரும் அறுநூலைத் திருத்த நீங்கள் புகுந்தது எவ்வளவு பேதமை. வருந்துகின்றேன் நண்பரே! பகவன் முதற்றே உலகு என்பதே சரி. அகரம் என்பது ஒரு தனித் தெய்வீக எல்லை. அதனை அடைய நீங்கள் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ? நினைத்தபடி யெல்லாம் நிதானமின்றிப் பெரியோர்களின் நூல்களைத் திருத்தவோ, குறைகூறவோ முயலவேண்டாம்.ஆப்பைப் பிடிங்கின குரங்கன் கதையாகிவிடும் நண்பரே!

ஜோதிடர் : எல்லாம் நவக்கிரகங்கட்குக் கட்டுப்பட்டவர்களே! வாழ்வின் நிகழ்ச்சிகள் அவரவர் விதிப்படி கிரகாச்சாரப்படிதான் நடக்கும். நான் ஜோதிடனாக்கும்.

அனந்தர் : ஓ. ஜோதிடரா? நல்லது ஆதியந்தம் பரமநாழிகை என்று ஜோதிடத்தில் சொல்லுவீர்களே! அந்த ஆதியெங்கே? அந்தம் எங்கே? பரம் எங்கே? நாழி எங்கே? அண்டத்தின் மேல் அங்கு உலாவும் கோள்கள் பிண்டத்தில் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன? பிண்டத்தில் எங்கே எப்படி அமைந்துள்ளன? ஒவ்வொருவருக்கும் கிரகங்கள் மாறி மாறி எவ்வாறு அமைகின்றன. இருபத்தேழு நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றனவே அவை என் தேகத்தில் எப்படி எங்கே அமைந்துள்ளன?

ஜோதிடர் : உங்கள் ஜாதகத்தைப் பார்த்துதான் சொல்லமுடியும்.

அனந்தர் : நான் தான் ஐயா ஜாதகன். என்னைப் பார்த்து என் கிரகங்கள் எப்படி அமைந்துள்ளன? நான் பிறந்தநேரம், ராசிநிலை, கிரக நிலை, நவாம்ச நிலை, திரேக்காண நிலை எல்லாம் அறிந்து என் முன்பின் வரலாறுகளை கூறமுடியாதா? ஒரு மனிதனை பார்த்தவுடனே இவன் இன்ன நேரத்தில் ஜனித்தான் என்று துல்லியமாக நாழிகை வினாடி முதலாகக் கூறக்கூடிய கணிதம் இருக்கிறது. அது மட்டுமில்லை இவன் இத்தனை பிறவிகள் எடுத்து இப்படி வந்துள்ளான் என்று ஸ்பஸ்டமாகக் கூறும் கணித வல்லபம் பெற்ற மகான்மியர் எங்கள் ஆண்டவர்கள். தனிப்பெருங்கருணைமிக்க அந்த அருட்பெருஞ்ஜோதியின் திடத்தைக் காணாமல் ஜோதிடர் என்று கூறிக் கொண்டால் நான் அதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்?

ஜோதிடர் : எல்லா ஜோதிடர்களும் ஏட்டைப் பார்த்துக் கணக்குப் போட்டுத்தான் ஜோதிடம் சொல்கிறோம். ஆளைப் பார்த்து பலன் சொல்ல எனக்கென்ன சாமியா பிடித்திருக்கிறது?

அனந்தர் : சாமி உங்களைப் பிடித்திருந்தாலும் சாமியை நீங்கள் பிடித்திருந்தாலும் அந்தமாதிரி பலன்சொல்ல முடியும். இரண்டுமில்லை உங்களுக்கு எனவே உங்களால் முடியாதுதான்.

ஜோதிடர் : மெய்வழிச் சபையினர் உலகுக்கு என்ன தொண்டு செய்கிறீர்கள்?

அனந்தர் : எல்லா உயிர்களும் விரும்புவது துக்கநிவர்த்தி சுகப்பிராப்தி, எமன் கைப்பட்டுப் பிணநாற்றத் தீட்டுக்கு உரிய நரனாக இருந்தவனை மனிதனாக்கித் தங்களின் அருளாரமுதப் பெட்டகத்திலிருந்து நவநிதியங்களை வாரி வழங்கித் தங்கள் திருமணிச் சூலில் தாங்கி, மறுபிறப்புப் புனல் ஜென்மம் தந்து, மனிதனைத் தேவனாக்கி, நித்திய ஜீவனை இவனுக்குள் பதிப்பித்து சுவர்க்கப்பதி பரமபத வாழ்வினுக்கு உரியவனாக ஆக்குகின்ற, உலகில் எங்கு மில்லாத நிகரற்ற தொண்டினைச் செய்தது மெய்வழிச்சாலை ஒன்றுதான்.

சாதிபேதமில்லை யென்று மேடையேறி வாய்கிழிய முழங்கிவிட்டு வீட்டுக்குள் வந்து ஒரு ஜாதிக்குள் ஒன்பது பிரிவுகள் காட்டி வாதம் பேசி நான் பெரிது நீ சிறிது என்ற மதிப்பு வெறி கொள்ளும் சமுதாயத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை நிதரிசனமாக நிருபித்து சாதி மத, இன, நிற, மொழி கட்சி பேதமற்ற ஒரு சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிப் பெரும் தொண்டு செய்தவர்கள், வான் கொடை வள்ளல், சர்வ மூலமந்திர நிரூபிக மகான் மியராகிய எங்கள் மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்தான்.

பஞ்சமா பாதகங்களுடன், புகை சினிமா என்ற இரண்டையும் சேர்த்து சப்தமா பாதகங்களையும் தள்ளி மிதித்து சுத்த ஒழுக்க யதார்த்த வைராக்கிய சீலர்களை உத்தமர்களை உருவாக்கி வைத்திருப்பது மெய்வழிச் சபையில்தான். இதை விடச் சிறந்த தொண்டு உண்டேல் கூறுங்கள்.

தொண்டு செய்வதாகச் சொல்லி விளம்பரப்படுத்திக் கொண்டு நன்கொடைகள் வசூலித்து கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்று செய்வதும் திரைமறைவில் பொதுச் சொத்தினைக் களவாடித்தான் வளர்வதும்தான் உலகினர் செய்யும் தொண்டு.

ஜோதிடர் : மெய்வழிச் சபையினர்க்குத் தங்கம் ஏது? அதனை ஏன் மண்ணில் மறைக்க வேண்டும்?

அனந்தர் : இந்த உலகினர் தாங்கள் வணங்கும் தெய்வங்கள் என்று கூறும் கல், செம்புச் சிலைகட்கு ஆபரணங்கள் பூட்டி அலங்கரித்து மகழும்போது அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடுநிறைந்த அருட்பெருஞ்ஜோதியைய், அதே தனிப் பெருங்கருணையானது ஒரு திருவுருத் தாங்கி வந்து அறிவித்தபொது அதனை அறிந்து அன்பர்கள் அத்திருமேனிக்குக் காணிக்கை கொண்டு வந்தனர் அந்த கனக சபையைக் கண்டனர். ஆணிப் பொன்னால் பல ஆபரணங்கள் செய்து அணிவித்து ஆனந்தம் கொண்டனர். பொன்னரங்கம் எனும் ஆலயம் எழுப்பி அண்ணலை அங்கே எழுந்தருளச் செய்து போற்றித் துதித்தனர் ஏற்றி மகிழ்ந்தனர்.

பிச்சை எடுப்பவன் தெருவுக்கு உரிமை பேசுதல் போல் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன், நம் நாட்டைத் தன் நாடு என நாட்டிய வன்மனத்தினன், இரண்டாவது உலகப் பெரும்போர் செய்ய ஆயுதக் கிடங்காக வைக்கப் பொன்னரங்க ஆலயக் கட்டிடம் பொருத்தமாக இருப்பதைக் கண்டு அதனை "உலக சேமப் போருக்குத் தந்தருள வேண்டும்" என்று எங்கள் பிரான் அவர்களைப் பணிந்து கேட்டுக் கொண்டான். ஆண்டவர்கள் அவனுக்கு அதனை வழங்கினார்கள். மதிப்பிலடங்காத மாணிக்க மாளிகையாகிய அதற்கு அவன் ஒரு மதிப்பிட்டு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் விலையாகச் சமர்ப்பித்தான்.

தெய்வ மாணாக்கர்கள் அத்தொகையைத் தங்கமாக மாற்றி ஆண்டவர்கள் திருவடிகளில் சமர்ப்பித்தனர். அப்போது ஒரு சவரன் ரூ.33/-.

ஆண்டவர்கள் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பாப்பனாச்சிவயலில் ஆசிரமம் ஏற்படுத்தி அங்கே எழுந்தருளவும் தங்கம் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டுக்கள்வர்கள் அதனைக் கொள்ளையடிக்கத் தீர்மானித்தனர். அச்செய்தி கேட்ட எமது பிரபு நாயகம், தெய்வ நாட்டம் கொண்டு வரும் ஏழை மக்கட்கு இந்தச் செல்வம் பயன்படட்டும் 'கரன்சி' தாள்கள் மதிப்பிழக்கும் காலத்தில் தான் இவை பயன்படுத்தப்பட வேண்டும். இதுவரை இதனை மண்ணில் போட்டு விடுங்கள் என உத்தரவிட்டருளினார்கள். அதன்படி செய்யப்பட்டது.

எங்கள் தெய்வம் விராட்தவ மகாசமாதி நிலைக்கு எழுந்தருளிய பின்னர் அரசினர் அதனை எவ்வாறோஅறிந்து வந்து தோண்டி எடுத்துச் சென்றனர். ஆலயச் சொத்து என்று உணர்ந்து தற்போது திருப்பித் தந்து கொண்டுள்ளனர்.

ஜோதிடர் : நீங்கள் தான் உண்மை பேசும் மெய்வழிச் சபையினர் ஆயிற்றே! கணக்குக் காட்டி ரசீது ஏன் வைக்கவில்லை?

அனந்தர் : ஏதோ கொடுத்து வைத்தவர் மாதிரி... நீர் கேட்கும் இத்தகைய கேள்விகட்கு விடை கூற வேண்டுவதில்லை. இங்கே சுற்றியுள்ள மக்கள் தெரிந்து தெளிவதற்காகக் கூறுகின்றேன். நல்லது. எங்கள் ஆலயத் தங்கம் மண்ணிலிடப்பட்டது 1940-ல். தங்கக் கட்டுப்பாட்டு சட்டம் அமுலுக்கு வந்தது. (சுதந்திரம் பெற்ற பின்னர்) அதன் பிறகு எவராவது இதோ என் சொத்து மண்ணில் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு அனுமதி கொடுங்கள் வரிகட்டுகின்றேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்களா? நல்லது உமது பேச்சின்படியே யோசிப்போம். உங்களிடம் கொஞ்சம் தங்க நகைகள் இருக்கின்றன அல்லவா.

ஜேதிடர்: ஆமாம்

அனந்தர் : அதற்குக் கணக்குக் காட்டி ரசீது வைத்திருக்கின்றீரா?

ஜோதிடர் : இல்லை

அனந்தர் : உமக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் யாராவது தங்களிடம் உள்ள தங்க ஆபரணங்கட்குக் கணக்குக்காட்டி ரசீது வைத்திருக்கிறார்களா? யதார்த்தமாகப் பதில் சொல்ல வேண்டும்.

ஜோதிடர் : எனக்குத் தெரிய யாரும் அப்படி இல்லை.

அனந்தர் : இங்கே கூடி இதனைக் கவனித்துக் கொண்டிருக்கும் உங்களில் யாராவது உங்களிடமுள்ள நகைகட்கு எடைக் கணக்குக் காட்டி வரிகட்டி ரசீது வைத்திருக்கின்றீர்களா?
அங்கிருந்தவர்கள்: இல்லை.

அனந்தர் : இப்படிச் சமூகநடைமுறைக்குக் கொண்டு வர இயலாத, ஒவ்வாத ஒரு சட்டத்தை அரசு இயற்றியது. அதனை நீங்கள் எவரும் கடைப்பிடிக்கவில்லை. அடுத்தவர்கள் மட்டும் அதன்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பேதைமை. அத்துடன் சொத்து வைத்திருக்கும் உரிமை இந்தியப் பிரஜையாகிய ஒவ்வொருவருக்கும் உண்டு. இவர்களின் கணக்குப்படிப் பார்த்தால் எங்கள் சாலை சொத்து என்று கூறக் கூடிய தங்கத்தின் மதிப்பு ரூபாய் முப்பது லட்சம். முப்பது லட்சம் ரூபாய் பணக்காரர்கள் நம் தமிழகத்தில் ஏராளமான பேர் உள்ளனர். அதனால்தான் கூறுகின்றேன் ஐயா உலகில் பிறரிடம் குறை காண்பதில் எல்லோருமே சமர்த்தர்கள்தான்.

ஜோதிடர் : Mother India என்று சொல்கிறார்களே Who is her husband?என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்?

அனந்தர் : சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இப்படி ஒரு கேள்வியா?
ஐயா தந்தையே என்று நாம் ஒருவரை அழைத்தால் நம் தாய்க்கு உளவு என்று களங்கம் பேசவா? தம்பீ என்று ஒருவனை அழைத்தால் என் தந்தைக்குப் பிறந்தவனே என்று விபரீத அர்த்தம் கற்பித்துக் கொள்வதா? நிலம், நீர், ஆகாயம், கல்வி, செல்வம் ஆகியவற்றை பூமாதேவி, கங்கா தேவி, ஆகாயவாணி, கலைவாணி, லட்சுமி என்றெல்லாம் தாயாகப் பாவித்துப் பேசுவது போல, தாய் நாடு என்று கூறுவது வழக்கமாக உள்ளது. அதற்காகத் தந்தை யார்? என்று கேட்பதா? நீர் கேட்பீர் என்பதற்காகத் தான் பாரதியார்

செந்தமிழ் நாடெனும் போதினிலே - ஒரு
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

என்று தந்தையர் நாடு என்று பாடினார்கள் போலும்.

ஜோதிடர் : உங்கள் தலைப்பாகையில் பிறை வைத்திருக்கிறீர்களே. உங்களை ஏன் முஸ்லீம் என்று கூறக்கூடாது.

அனந்தர் : சிவபெருமானைக்கூட "பித்தா பிறைசூடி" என்று தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அவரும் முஸ்லீமோ.

ஜோதிடர் : உங்கள் குரு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அதனால் உங்களையும் அப்படி ஆக்கிவிட்டார் என்று எண்ணினேன்.

அனந்தர் : நதி மூலம் குரு மூலம் விசாரிக்கக் கூடாது. நீங்கள் கட்டியிருக்கிய வேட்டி முதலியார் கடையில் வாங்கியது. சட்டை நாய்க்கர் கடையில் வாங்கியது. ஜமக்காளம் செட்டியார் கடையில் வாங்கியது. நீங்கள் உங்கள் மனைவியிடம் முதலியார் கடை வேட்டியையும் நாய்க்கர் கடைச் சட்டையையும் எடுத்து வா என்று சொல்வீர்களா? அல்லது என்னுடைய வேட்டி சட்டையை எடுத்து வா என்று சொல்வீர்களா?

ஜோதிடர் : என்னுடையது என்றுதான் சொல்வேன்.

அனந்தர் : இறைவன் எந்த மதத்தைச் சார்ந்தவர்? ஒன்றே தெய்வம். அதற்கு சாதி, மதம், இனம்,நிறம், மொழி, பேதம் ஏதும் கிடையாது குறுகிய வட்டத்திற்குள் நினைவை நிறுத்திக் கொண்டு வாதாடி வழக்கழிவு செய்ய வேண்டுவதில்லை. எல்லா நாமங்களும் அந்ந ஏகநாயகரான இறைவருக்கே. பிரம்ம ஞானத்தைப் பெற்றவர் எக்குலத்தவராயினும் அவர் பிராமணரே! அப்பன் 'கலெக்டர்' என்றால் மகன் கலெக்டரா? அப்பன் 'வக்கீல்' என்றால் மகன் வக்கீலா? அதற்கென்று ஒரு கல்வியுண்டு அல்லவா? அதுபோலப் பிறப்பால் ஒருவன் பிராமணணல்ல. பிரம்மக் ஞானந்து பிராம்மணா. பிரம்மஞானம் பெற்றவரே பிராமணர் பிரம்ம ஞானத்தைப் பெற்றவரே யக்ஞோப வீதம் என்னும் பூணூல் அணிந்து பஞ்சகச்சம் கட்டத் தகுதியுடையவராகிறார். எம்பெருமானும் பஞ்சகச்சம், பூணூலுடனே விளங்குவார்கள்.

ஜோதிடர் : கடவுளைக் காணப் பூணூல் தேவைதானா?

அனந்தர் : பிரம்மப் பிரகாசமான அருட் பெருஞ் ஜோதியைத் தரிசித்தவர்கள் அறுபுரிநூல் பிரான் நிலை அறிந்தவர்கள் அதற்குப் புற அடையாளமாக அணிந்து கொள்வது பூணூல்.

ஜோதிடர் :
மூடம் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வும் மன்னனும்
ஈடொன்றிலானாகு மாதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம்பர நூல் சிகையறுத்தால் நன்றே

(இதன் பொருள்: இறையருள் அறிவு விளக்கம் பெறாதோர் வெற்றுச் சடங்காக (சிகை) ஜடாமுடியும் பூணூலும் தரித்திருப்பார்களானால் அவர்கள் வாழும் நாடு வளம் குன்றும் அரசனும் நலம் குன்றுவான். ஆதலால் அப்படிப்பட்ட மூடர்களின் சிகையைக் களைந்து பூணூலை அறுத்தெறிதல் நல்லது)

அனந்தர் :
"மூடம் கெட்டோர் சிகைநூல் முதற் கொள்ளில்
வாழும் புவியும் பெருவாழ்வும் மன்னனும்
ஈடிலாச் செல்வம் எய்தெங்கும் ஓங்கிடும்
தேடற்கரியநூல் சிகைபுனைதல் நன்றே"


என்கிறேன் அதற்கென்ன சொல்கிறீர்?

எதிர்பாராத இந்த பதிலைக் கேட்டு

ஜோதிடர் : மன்னிக்க வேண்டும் பெரியவரே!

அனந்தர் : நண்பரே! உங்களைத் திருச்சிக்காரர் என்று சொல்லிக் கொண்டீர்கள். அதற்கு அருகில் தானிருக்கிறது 'மெய்வழிச்சாலை' நல்ல வாய்ப்பு வந்தபோது நழுவவிட்டு விட்டீர். அது மட்டுமின்றி பெரும் வாதாட்டமாடி அடுத்தவனுக்கு முட்டாள் பட்டம் கட்ட நினைக்கிறீர். அது முடியாது போய் வாரும்.

(மறுநாள் இக்கருத்துக்களை 53 பாடல்களாக எழுதி அந்த ஜோதிடரிடம் காட்டும்படி அந்த ஜவுளி ஸ்டோருக்கு அனுப்பினேன் அவர்கள் அதனை அவரிடம் காட்டவும் அவர் இடந்தெரியாமல் வாய் போட்டு விட்டேன் என்றாராம். சில நாட்கள் கழித்து நேரில் சந்தித்தபோது பெரியவர்கள் என்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்றார். ஆசீர்வாதம் அல்ல ஐயா, ஆசீர் பாதம், ஆசீர்பதிப்பது ஆண்டவர்களாலன்றிப் பிறரால் இயலாது ஆண்டவர்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்று கூறி வந்தேன்.)

ஆதியை என்னுள் அமர்ந்த பகவனை
நீதியை எங்கும் நிலைத்த தலைவரை
ஜோதியை மெய்வழிச் சுந்தரர் தூமலர்ப்
பாத முளரிகள் பற்றிநின் றோதுவாம்

தன்னையும் தனக் காதார மாய்னின்ற
முன்னைப் பழம்பொருள் மூத்த தலைவரை
பின்னைப் புதுமைக்கும் போர்த்துமப் பெற்றியர்
என்னையும் ஏன்ற பொன்னிணையடி ஏத்துவாம்!

நண்ணிநின் றார்க்கருள் நாயகர் மாதவ
விண்ணினின் றிங்கண் வெளிவந்து ஆண்டவர்
அண்ணலர் ஒன்றி அறிபவர்க் கல்லது
நண்ணலர்க் கெங்ஙன் நணுகநிற் பாரரோ!

உள்ளத்தி னுள்ளே உறைந்துணர் வோர்க் கருள்
கள்ளத்தின் ஐயரைக் காதலர்க் காவரை
கொள்ளத்தன் சிந்தை குறுகார் குறை சொலல்
வெள்ளத்தி லுற்ற சிறுபுளி யொப்பரே!

நூல் பல வோதி நுவன்றிடில் என்பயன்
ஆலமர் கண்டர் அருட்கடல் மேவிய
மாலவர் தெய்வம் மலரவர் மெய்வழி
மேலவர் மெய்ந்நிலை விண்டறி யாவிடில்

தன்னுயி ருண்டெனத் தானறி பான்மையர்
என்னிறை யின் றெனல் இன்றெனில் இன்றதாம்
தன்னைக் குருமுகத் தேயறி தன்மையர்
பொன்மலர் நன் மணம் பெற்றது போல்பவர்

சித்தர்கள் செப்பிய தொப்பிடு சிந்நையர்
வித்தகர் மெய்யுரை மேவி யுணர்ந்நிடில்
அத்தனைப் பேரின்ப ஐயரின் மேன்மையை
மெத்தவும் காணலாம் வான்பதி மேவலாம்

பூட்டுக்குள் பூட்டாய்ப் பொலிந்துள மெய்ம்மையைக்
காட்டுக்குள் என்னைக் கலந்தின்பம் நல்கியென்
பாட்டுக்கு நன் பொருளாகிய நாதரை
ஏட்டிக்குப் போட்டியாய் பேசிடில் எய்துமோ

வேடங்களென்று விளம்பன்மின் அம்பலத்
தாடெங்குள் ஐயர் அருட்தவக் கட்டளை
நாடெங்கள் தெய்வ நலம்பெற நண்ணுவோர்
வீடிங்கண் மேவ விளம்பிய சூத்திரம்

பேணாது ஒன்றின் பெற்றியைக் காணுங்கொல்
காணாது ஒன்றைக் கட்டுரை கூறன்மின்
பூணார மார்பின் புரிநூல் அகச்செயல்
பூணாது எங்கள் புரிந்திடுவீர்கொலோ!

ஆதியை அறிந்தி டாது அஃதும இஃதும் பேசுவார்
வேத நூலை மெய்யரை வீணதாயி கழுவார்
வாது கூறிலாவதோ வானமிர்த மெய்யிது
தீது கூறி லில்லையோ தெய்வ மேன்மை! மேன்மையே

சித்தர் கூறிடாத தென்ன செப்பினாருன் ஐயரே
மெத்தவும் உரைக்க வென்று வேண்டிநின்ற அன்பரீர்
சித்தர்கள் உரைத்த சத்து சாலவும் அறிவீரோ
அத்தனாரு ரைத்த நூல்கள் யாவும் கற்ற துண்டுகொல்?

செப்பு மெய் மதத்தினில் செனித்த பின்னர் காண்பதை
அப்பனின் மதத்தினுக்கு அன்னைபால் உதித்தவர்க்(கு)
எப்படிச் செ லாலுரைக்க ஏலுமென்று எண்ணுமின்
துய்ப்பவர் உணருமின்பம் சொல்லில் கூறலாகுமோ

தாயினோடு சேய் கலந்து சாருமின்பம் தன்னையே
ஆய்வு செய்து காண்வோ அறிந்து பேசலாகுமோ
நேய மோடு தண்டமிழ் நிலத்து வந்த வான்முதல்
தாயினை அறிந்திலாதார் தர்க்கம் செய்து என் செய்வார்

நன்னயத்தி னாலுளம் நலஞ்சிறந்த மாந்தர்கள்
அன்னையென்று நாட்டினை மொழியைக்கூற லுண்டுகாண்
அன்னையென்று கூறினீர் தந்தை யார் எனச்சிலர்
வின்னமாய் வினாவலுற்ற வேதனைக்கென் சொல்லுகேள்.

தந்தை யென்று இன்னவர் தமக்குள் பேசும் ஓர்நபர்
தந்தையோ இவர்க்குரிய தாய்க்குமோர் உறவுகொல்
சிந்தனைக்குச் சிற்பியென்று செப்பு மிந்தமாந்தர்கள்
விந்தையாய் வினாவலுற்று வெல்வதாகக் கற்பனை

எட்டுசாண் உடம்பினுக்கு இவரணிந்த ஆடைகள்
கட்டு வேட்டி சட்டைகள் கருத்தினிச்சையல்லவோ
இட்டமாய் அவரவர் இசைந்நவாறணிவதை
நட்டமாய் குறைத்துதுரைக்கும் ஞாயமென்ன ஞாயமோ?

காயமே புகுந்து இந்தக் காசினிக்குள் யாவினும்
தாயகம் எனச் சிறந்த தெய்வநீதி தன்னரும்
சேயதான எம்மவர் செம்மையாய் நெறிச் செல
சாயமான காவியைத் தந்தருள் புரிந்தனர்

தேய மண்ட முற்றுள தெய்வந் தன்னைக் காவியாம்
காயமோ தனக்கு ளாக்கும் என்ற நண்ப! நான்கதாம்
காயமுண்டு அத்துளே காரத்தின் செம்மை சேர்
சாய மான காவியே கண்டுணர்தெளிந்திடும்.

நற்ற வத்தி னோரை எந்த நாடும் எந்த நாளுமே
குற்றமாய்க்கு றித்து பல் கொடுஞ்செயல்கள் செய்தனர்
இற்றை நாள் அவர்கள்தாம் இல்லையாவ தெங்ஙனம்
மற்று நீரு நானுமே மனங்கனிந்து பாருமே!

இத்துடன்மு டிந்த தென்று எண்ணுகின்ற மாந்தரீர்
செத்த பின்னர் இல்லையென்று செப்புகின்ற சிந்தையீர்
முத்தனார் உரைத்தநூல் திருத்துகின்ற மாண்பரீர்
சித்தமே களித்துசற்று சிந்தனைகள் செய்குவீர்

சோதிடங்கள் கூறியே கழன்று வந்து வாழ்கிறீர்
சோதியின்திடம் அறிந்து சொற்கள் கூறவேண்டுதும்
ஆதியந்தம் பரமநாழி என்று கூறும் அன்பரே
ஆதியெங்கு அந்தம் எங்கு பரமனெங்கு கூறுமே!

அண்டமேல் விளங்கு கோள்கள் அங்குலாவுகின்றன
பிண்ட மேல் அவை கிடந்து பேசுமாற தெங்ஙனே
விண்டுநீர் உரைக்கு மக்கள் வாழ்க்கையின் பலன்களைக்
கண்டு கொண்ட தெங்ஙனம் கனிந்து கூற வேட்குதும்.

ஒன்பதான கோள்கள் மூன்று ஒன்பதான மீன்குவை
என்பதான தும்முளே எங்ஙன் ஒன்றியுள்ளன
மன்ப தைக்குள் யாவினுக்கும் மாறி மாறி நின்றிடும்
இன்பதத்தைக் காணு மாந்தர் தன்பதத்தைக் காண்பரே!

நேற்று இன்று நாளையும் நிகழ் பலன்கள் யாவுமே
சாற்றுகின்ற சோதிடர்கள் சற்று எண்ணல் வேண்டுதும்
நேற்று அன்னை தந்தை சேருமுன்னர் நம் நிலைதனை
கூற்றுவன் வருமுனர் குறித்தறிந்து கொண்மினே!

அன்றிருந்த தெங்ஙனம் யாவுமே அறிந்த போல்
இன்று பேசு நாமினி இங்கு வாழ்ந்த பின்னரே
சென்று சேர்வ தெங்கு காண் சிறந்துநீர் நினைத்திடும்
கன்று தாயறிந்திடில் கரந்த பால் சுரந்திடும்.

என்னையே படைத்தவன் இறைவ னென்று கூறினால்
அன்னவன் றனைப் படைத்த தாரென வினாவினீர்
தன்னையே இயக்குகின்ற தன்னுயிரறிந்திடில்
அன்னையாம் இறையருட்குள் ஆகியின்ப மேவலாம்.

உண்டு பார்த்த பின்னரே உமக்கினிக்கும் சர்க்கரை
கண்டு தேர்ந்த பின்னரே கருத்தினிக்கும் அக்கரை
விண்டு கூறலாவதோ விண்ணதான சற்கரை
பண்டுநூலுரைத்ததைப் பகுத்தறிந்து பார்மினே!

இன்ன தீமை செய்திடில் விளைவ தின்ன தென்பதை
மன்னர் வாழ்வி லுற்றதை வரைந்து கூறு பாரதம்
முன்னர் கூறு நீதியை முறையறிந்து எண்ணிலார்
வின்னமாகக் கூறுகின்ற வாதமென்ன விந்தையே!

சாக்கடைக்குள் சந்தனத்தில் மாறிமாறிக் குத்தினால்
சாக்கடை மணப்பதில்லை சந்தனமும் கெட்டிடும்
ஆக்கியோனும் இல்லையென்ற ஆரவாரம் செய்கிறார்
தாக்கியாறு ஆதாரம் உண்டு என்றும் கூறுவார்.

புருவ மையம் பொட்டு காந்த சக்தியென்று கூறியே
அருவ மாய றிந்தவாறு யாவும் பேசும் வல்லிரே
அருவமாயிருந்து அண்டம் யாவும் காக்கும் தெய்வமே
உருவமாக வந்தவற்றை உணர வைத்த தறிகிலீர்.

நாத்திகத்தைப் பேசி நாத்தழும்பு ஏறு நாயினேன்
ஆத்திகத்து ளானவாறு எங்கனென்று ஓய்வதாய்
காத்தவர்க்கு அம்பலம் நீர்த்துறையென் றன்று சொல்
பூத்தவாறு கேளுமே பொறுத்துரைக்கும் ஏழையேன்.

கண்ணை மூடிக் கொண்டு விண் கதிர்களில்லை என்றுதான்
திண்ணமா யுரைத்தல் போலும் சாதனைகள் தேவையோ
கண்ணையும் கருத்தையும் கொடுத்த தெய்வ மாண்பினைத்
திண்ணமாய்அறிய வேட்ட சிந்தைனல்ல சிந்தையே!

என்னையே படைத்தவன் இறைவ னென்று கூறினால்
அன்னவன் றனைப் படைத்த தாரென வினாவினீர்
தன்னையே இயக்குகின்ற தன்னுயிரறிந்திடில்
அன்னையாம் இறையருட்குள் ஆகியின்ப மேவலாம்.

உண்டு பார்த்தபின்னரே உமக்கினிக்கும் சர்க்கரை
கண்டு தேர்ந்த பின்னரே கருத்தினிக்கும்அக்கரை
விண்டு கூறலாவதோ விண்ணதான சற்கரை
பண்டுநூலுரைத்ததைப் பகுத்தறிந்து பார்மினே!

இன்ன தீமை செய்திடில் விளைவ தின்ன தென்பதை
மன்னர் வாழ்வி லுற்றதை வரைந்து கூறு பாரதம்
முன்னர் கூறு நீதியை முறையறிந்து எண்ணிலார்
வின்னமாகக் கூறுகின்ற வாதமென்ன விந்தையே!

சாக்கடைக்குள் சந்தனத்தில் மாறிமாறிக் குத்தினால்
சாக்கடை மணப்பதில்லை சந்தனமும் கெட்டிடும்
ஆக்கியோனும் இல்லையென்ற ஆரவாரம் செய்கிறார்
தாக்கியாறு ஆதாரம் உண்டு என்றும் கூறுவார்.

புருவ மையம் பொட்டு காந்த சக்தியென்று கூறியே
அருவ மாய றிந்தவாறு யாவும் பேசும் வல்லிரே
அருவமாயிருந்து அண்டம் யாவும் காக்கும் தெய்வமே
உருவமாக வந்தவற்றை உணர வைத்த தறிகிலீர்.

நாத்திகத்தைப் பேசி நாத்தழும்பு ஏறு நாயினேன்
ஆத்திகத்து ளானவாறு எங்கனென்று ஓய்வதாய்
காத்தவர்க்கு அம்பலம் நீர்த்துறையென் றன்று சொல்
பூத்தவாறு கேளுமே பொறுத்துரைக்கும் ஏழையேன்.

கண்ணை மூடிக் கொண்டு விண் கதிர்களில்லை என்றுதான்
திண்ணமா யுரைத்தல் போலும் சாதனைகள் தேவையோ
கண்ணையும் கருத்தையும் கொடுத்த தெய்வ மாண்பினைத்
திண்ணமாய் அறிய வேட்ட சிந்தைனல்ல சிந்தையே!

பாடல்கூறி மேடை யேறி வாதுகூற லாவதென்
ஆடல் நாயகர்பதத்துள் ஆக்குமோ இவை யெலாம்
மூடலைக் கலைந்துணர்ந்து முத்தெடுக்கத் தன்னுளே
தேடலாவ தொன்றுதான் சிறந்து தென்று செப்புதும்

உண்டறங்கி இன்பமுற்றினம் பெருக்கி வாழ்பவர்
தொண்டு தொண்டு என்கிறார் தொண்டின் மேன்மைகாண்கிலார்
அண்டர் கோனிருப்பிடம் அறிந்து காண வல்லிரேல்
தொண்டு கண்டு உய்குவார் துய்யமெய் உணருவார்

காலதேச வர்த்த மானம் கண்ட மெய்யின் மாதவர்
ஞாலமுய்ய வென்று அன்று நன்று கூறு வேதமாம்
நூலை நன்கு ஆய்ந்து காண்கிலாது தீமை கூறுதல்
வேலையற்ற வேலையன்று மெய்யுரைக்கச் சொன்னதே!

இனிப்பதைச் சுவைத்தறிந்த இன்பமுற்றுக் காண்பதை
இனித்தபின் சுவைப்பனென்னில் எங்ஙனாகும் சொல்லுமின்
தனித்தவக் கடல்புவிக்கண் தானிவர்ந்து வான்செயல்
இனித்த இன்பம் எங்ஙனே இசைந்து கூற வல்லரே!

பெண்ணின் வேட மீட்டவர் பொரந்த லாகுமோ மணம்
மண்ணின்மீது அன்னவாறு வேடமிட்ட பொய்த்தவர்
எண்ணம் சொல் செயற்குள் பொய்மை செய்து ஏய்ப்பு செய்தலால்
எண்ணி மெய்ம்மைநாடு மாந்தர் நாத்திகத்துள் மேயினார்

செம்மைசேர் மதங்கள்தாம் செயல்மறைந்து போயநாள்
அம்மையப்பர் மெய்மதம் அருட்செய்சிந்தை மேவியே
எம்மை மெய் வழிக்குள்ளாக்கி ஏன்று கொண்ட சீர்மையை
தம்மை நன் குணர்ந் திடார் தரங்குரைக்க வல்லரோ?

சொற்சிலம்பு மாடிச் சுற்று சூழலேலப் பேசினும்
மற்புரிந்து மெய்வழிக்கு மாறு கூறி யாடினும்
நற்பதம் எதிர்த்து இந்த ஞாலமுற்று மேவினும்
பொற்பதம் மறைந்திடா பரமராணை சத்தியம்

என்னையும் பொருளென விங்கேன்ற பேர் தயாநிதி
பொன்னை வைத்திருந்த தேன் புதைத்த தேன் மறைத்ததேன்
பின்னை ஆட்சி மாந்தர்கள் பெயர்த்தெடுக்கலானதேன்
என்ன காரணம் இதற்கு என்றெனை வினாவினீர்

பிச்சையேற்கு மாந்தர்கள் தெருக்குரிமை பேசல் போல்
இச்சை மேவு வெள்ளையர் புவிப் பெரும்போர் செய்தகால்
நச்சு ஆயு தக்கிடங்கினுக்கு எங்கள் ஆலயம்
நச்சினாகள் எங்களின் பிரானுமஃது நல் கினார்(கள்)

மதிப்பினுக் கடங்கிடாப் பொன்னரங்கினுக்கு வம்பர்கள்
மதிப்பையிட்டு ஓர் தொகை மாதவர் முன் வைத்தனர்
மதிப்பழிந்து போகும் தாளை மாணவர் பொன்னாக்கினார்
மதிபுனைந்தமாதவர் திருமுனர் பொன் சாற்றினார்

விண்ணில் மண்ணி லெங்குமே நிகரில் எந்தை மாதவர்
மண்ணும் பொன்னும் ஒன்றென மதிப்பவரப் பொன்னினை
மண்ணிலிட்டு வைம்மின் தாள் மதிப்பிழக்கும் நாளிலே
விண்ணின் மைந்தருக்குதவும் என்றுரை அருளினார்

மாய்கையால் மயங்கினோர் மனந்திரிந்து செய்ததோ
தாய்கையே இதற்கெனத் தடம் எடுத்துத் தந்ததோ
ஆய்வு செய்து பொன்னெடுத்து அரசு சென்றொழிந்தது
தூய்மை மின்னு நெஞ்சுகள் துலங்கியே பொன்னானது

நாடுதன் சுதந்திரம் நண்ணாத முன்னர் செய்தது
வாடிடும் மனத்தி னோர்கள் வம்புச்சட்டம் ஏட்டிலே
நாடியே நடந்த பேர்கள் நாட்டிலில்லை மற்றவர்
கூடியே பிறர்க்குரைக்கும் நீதியென்ன நீதியே!

பிறவியின் குருடர் கூட்டம் பெருக்கமாகக் கூடியே
இரவியில்லை இல்லை என்று ஏகசத்தம் போட்டிடில்
இரவியில்லை யாகுமோ எந்தை மெய்வழிக்குலம்
பரவி ஓங்கி என்றுமே பார்நிறையும் பாருமே

பிரம்ம வித்தை என்ற ஒன்று பேச்சிலாமற் போனநாள்
பிரம்ம வித்தை தன்னைக் கொண்டு பிரம்மம் வந்து பேரருள்
பிரம்ம வித்துக் குரிய பேர்கள் பெற்றுக் கொள்ளலாயினார்
பிரம்ம வித்திலாத பேரிகழ்ந்து பேசி என்பயன்?

பொன்னரங்க மண்ணில் பொன்னெடுத்த செய்திகேட்டுமே
வின்னமாய் நினைத்த நெஞ்சர் விலகி யோடிச் சென்றனர்
தன்னையும் தனக்குளே தலைவரையும் கண்டபேர்
பொன்னதாய்ச் சிறந்துயர்ந்து பெரிது மேன்மையுற்றனர்

நன்றுநான்குடம்பு என்று நண்ணியே அறிகிலார்
ஒன்றுதான் உடம்பு இந்ந உலக வாழ்வு என்றுமே
குன்றியே குலைந்து போகும் கடத்துள் காண்மின் காண்மினே
மன்றுளாகும் ஈசரை மறந்தபேர்கள் உய்வரோ?

ஜோதிடர்
மூடங்கெடாதோர் சிகைநூல் முதற் கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
ஈடொன்றிலஞ்கு மாதலாற் போர்த்துணர்ந்து
ஆடம்பரநூற் சிகையறுத் தானன்றே
(திருமந்திரம்)

அனந்தர்
மூடங் கெட்டோர் சிகைநூல் முதற் கொள்ளில்
வாழும் புவியும் பெருவாழ்வு மன்னும்
ஈடிலாச் செல்வம் எய்து எங்கும் ஓங்கிடும்
தேடற் கரியநூல் சிகைபுனைதல் நன்றே

பூணுநூலை சிரம்புனைந்த பாகையை இகழ்கிறீர்
பூணுநூலை மெய்யுடல் புகுந்து பார்மின் பேதையீர்
ஆணும் பெண்ணுமாகி நின்ற ஐயர்தாளை எண்ணிலார்
வீணிலே இகழ்ந்து பேசில் வெந்துமாய்தல் நிச்சயம்

முத்திரை அடி
அறிகின்ற வாய்ப்பு வருமுகின்ற போது
அதை யெற்றி யெத்தித் தமையே
அறிவோர்க ளென்றுநினைவே மயங்கி
அலைகின்ற மாந்தர் குழுவே

நெறிநின்று இந்தநிலமீது மெய்யை
நிலை செய்யவந்த நிலையை
நரிவாலினாலே கடலாழம் கண்ட
நிலைபோல் முடிந்து விடுமால்

வறிதிங்கு பேசும் உலகீர் உமக்கு
மடங்காது மெய்யின் வழியே
மதம்யாவு மொன்று குலம் தெய்வமென்னும்
நிலையாவுமொன்று எனவே

அறிவித்த எந்தை கழலார விந்தம்
அணிகின்றேனிங்கு சிரமேல்
அவர்தாள்கள் போற்றிப் புகழ் பாடியேற்றி
அகிலத்தில் எங்கும் திரிவேன்

ஆண்டவர்கள் தயவு!